மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 20,892 பேர் எழுதினர்


மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 20,892 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 1 Sep 2019 10:45 PM GMT (Updated: 1 Sep 2019 8:17 PM GMT)

கரூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 20,892 பேர் எழுதினர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்்-4 தேர்வு 80 மையங்களில் நேற்று நடைபெற்றது. கரூர் வட்டத்திற்கு உட்பட்ட காந்திகிராமம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் புகளூர் வட்டத்திற்கு உட்பட்ட தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் அன்பழகன், தேர்வெழுதும் அறைகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் வெளிநபர்கள் யாரும் சென்றுவிடாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

20,892 பேர் எழுதினர்

பின்னர் கலெக்டர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுத 24,763 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 20,892 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 3,871 பேர் தேர்வெழுத வரவில்லை. இத்தேர்வுக்கான பணியில் 80 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 7 பேர் வீதம் 15 நடமாடும் கண்காணிப்பாளர்கள் குழு, 80 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 15 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்வு எழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடையும் வகையில் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் வசதியும், தேர்வு மையங்களில் பிரத்யேகமாக பஸ்களை நிறுத்திச்செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு மையங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டு, அவர்கள் தேர்வெழுத உதவி செய்யும் வகையிலான நபர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது, என்றார்.

ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, தாசில்தார்கள் அமுதா(கரூர்), ரவிக்குமார் (மண்மங்கலம்), ராஜசேகர் (புகளூர்) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story