மால்வாணியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது, ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்
மலாடு மால்வாணியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ஒருவர் பலியானார். மற்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
மும்பை மலாடு மால்வாணி கேட் 8-ம் நம்பர் பகுதியில் ஒரு வீட்டில் நேற்று திடீரென சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துசிதறியது. இதில் அந்த வீடும் இடிந்து விழுந்தது.இதில் அந்தவீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் வீடு இடிந்து கிடப்பதை பார்த்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி கொண்ட 5 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
தகவல் அறிந்த மால்வாணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பலியானவர் மஞ்சு ஆனந்த் (வயது35) என்பது தெரியவந்தது. மேலும் சீத்தல் காடே (44), சித்தேஷ் கோடே (19), மம்தா பவார்(22), அஸ்வினி ஜாதவ் (26) ஆகியோர் படுகாயமடைந்தது தெரியவந்தது.
இதில் மம்தா பவார் என்ற பெண் 80 சதவீதம் தீக்காயமடைந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் வீடு இடிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story