தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நவீன இருசக்கர வாகன காப்பகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நவீன இருசக்கர வாகன காப்பகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 3 Sep 2019 10:00 PM GMT (Updated: 3 Sep 2019 8:22 PM GMT)

தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நவீன இருசக்கர வாகன காப்பகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நவீன இருசக்கர வாகன காப்பகம், குரூஸ்பர்னாந்து சிலை, ராஜாஜி பூங்கா ஆகிய இடங்களில் தலா ரூ.1½ லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, வாகன காப்பகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த உடன் தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து வசதிகளும் கொண்ட சிறந்த மாநகராட்சியாக திகழும். தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இந்த வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனங்களின் வருகை நேரம் மற்றும் வாகன பதிவு எண் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வாகன உரிமையாளர்களுக்கு பதிவு அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.

வாகன உரிமையாளர்கள் வாகனங்களை திரும்ப எடுத்து செல்லும் போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட அட்டையை ஸ்கேன் செய்து அதற்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படும். தினசரி கட்டணம் 12 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5-ம், சைக்கிளுக்கு ரூ.3-ம் வசூல் செய்யப்படும். மாத கட்டணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ.300-ம், சைக்கிளுக்கு ரூ.180-ம் வசூல் செய்யப்படும். இந்த காப்பகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது.

மேலும் மாநகராட்சியில் 2 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் சாதாரண நீர், குளிர்ந்த நீர், வெந்நீர் கிடைக்கும். தினமும் 5 ஆயிரம் பேர் தண்ணீர் குடித்து பயன்பெறும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்களில் கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, மாநகர செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி ஆணையர்கள் சரவணன், பிரின்ஸ், மாநகராட்சி சுகாதார அலுவலர்(பொறுப்பு) ஸ்டாலின் பாக்கியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story