நெல்லை அருகே, ரூ.7 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை


நெல்லை அருகே, ரூ.7 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை
x
தினத்தந்தி 5 Sept 2019 4:15 AM IST (Updated: 5 Sept 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ரூ.7 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவியை சித்ரவதை செய்ததாக வேளாண்மை அதிகாரி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நெல்லை,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூர் நாராயணபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). நெல்லையில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நெல்லை அருகே உள்ள தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்த பிரியதர்ஷினி (30) என்பவரை 10 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு சுரேஷ்குமார், கார் வாங்குவதற்காக மனைவி பிரியதர்ஷினியின் நகையை அடகு வைத்துள்ளார். ஆனால், அந்த நகையை திருப்பி கொடுக்கவில்லையாம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சேர்ந்து பிரியதர்ஷினியிடம் கூடுதலாக ரூ.7 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி சித்ரவதை செய்து வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பிரியதர்ஷினி, தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இதுதொடர்பாக பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து பிரியதர்ஷினி நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து நெல்லை கோர்ட்டில் பிரியதர்ஷினி மனு தாக்கல் செய்தார். நீதிபதி விசாரித்து, பிரியதர்ஷினி மனு மீது நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்பேரில், நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி, சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிரியதர்ஷினியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக அவருடைய கணவர் சுரேஷ் மற்றும் மாமியார் தங்கம்மாள், மாமனார் மாடசாமி, உறவினர் கவிதா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story