திருச்சி விமான நிலையத்தில் சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் அரியவகை ஆமைகள் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் அரியவகை ஆமைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Sep 2019 10:15 PM GMT (Updated: 5 Sep 2019 8:41 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் அரியவகை ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்துக்கு கோலாலம்பூரில் இருந்து ஒரு விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் இருந்து இறங்கிய சென்னையை சேர்ந்த பீர் முகமது முஸ்தபா என்பவர், அவருடைய உடைமைகளுடன் நடந்து வந்தார். அவருடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், சீனாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக திருச்சி வந்தது தெரியவந்தது. மேலும் அவர், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதாக கூறினார். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர் 8 அட்டைப்பெட்டிகளில் உயிரோடு இருந்த 2 ஆயிரம் அரியவகை ஆமைகளை மறைத்து, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து, அந்த ஆமைகளை ஆய்வு செய்தனர்.

அவை சீனாவில் வளரக்கூடிய அரியவகை ஆமைகள் என்றும், அங்கிருந்து அவை கடத்தி வரப்பட்டதாகவும், அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 2 ஆயிரம் ஆமைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் நமது நாட்டின் சீதோஷ்ண நிலை, அந்த ஆமைகளுக்கு ஏற்றதல்ல என்பதால் அவற்றை சீன நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

Next Story