சுற்றுச்சூழலை பாதுகாக்க 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது - அமைச்சர் ராஜலட்சுமி தகவல்


சுற்றுச்சூழலை பாதுகாக்க 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது - அமைச்சர் ராஜலட்சுமி தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2019 3:45 AM IST (Updated: 7 Sept 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது என அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மேலநீலித நல்லூர் ஒன்றியம் தேவர்குளம் அருகே உள்ள பட்டிகுளத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி முன்னிலை வகித்தார்.

தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 200 மரக்கன்றுகளை நட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர காடு வளர்ப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் வனத்துறை மூலம் 80 ஆயிரம் மரக்கன்றுகளும், விவசாயத்துறை மூலம் 5 லட்சம் பனங்கொட்டைகளும் விதைக்கப்பட உள்ளன.

மாநகராட்சிகள் மூலம் 1 லட்சம் மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 55 ஆயிரம் தொகுப்பு மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன.

5 லட்சத்து 80 ஆயிரம் விதைப்பந்துகள் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க நெல்லை மாவட்டத்தில் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. 5 லட்சம் பனை விதைகள் விதைக்கப்படுகிறது. அவற்றை விவசாயிகள், பொதுமக்கள் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் ஷில்பா பேசும் போது, “மத்திய அரசின் மூலம் ஜல் சக்தி அபியான் இயக்கம் என்ற நீர் மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவ மழை காலங்கள் முதல் பகுதியாக திட்ட செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நீர் வளம் குறைந்த மற்றும் வறட்சியான பகுதிகள் கண்டறியப்பட்டு 177 கிராம பஞ்சாயத்துக்களில் இந்த நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது“ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், ஆவின் தலைவர் சுதா பமரசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story