விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு - ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்


விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு -  ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:15 PM GMT (Updated: 6 Sep 2019 9:00 PM GMT)

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்

மீன்சுருட்டி, 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டிகள் மீன்சுருட்டி அருகே மேலணிக்குழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கொடியரசு வரவேற்றார். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. போட்டிகளில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். நடுவர்களாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஷாயின்ஷா, குமார், மோகன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கரிகாலன் நன்றி கூறினார்.

Next Story