நீர் வள ஆதார அமைப்புகளை நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும் கலெக்டர் பேச்சு


நீர் வள ஆதார அமைப்புகளை நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 7 Sep 2019 9:46 PM GMT (Updated: 7 Sep 2019 9:46 PM GMT)

நீர் வள ஆதார அமைப்புகளை நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீர் மேலாண்மை இயக்கம் ஜல்சக்தி அபியான் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் பொன்னையா தலைமையில் பள்ளி மாணவர்கள் ஏற்றனர்.

பின்னர் மழைநீர் சேகரிப்பு குறித்து கலெக்டர் பேசியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 924 ஏரிகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் 968 ஏரிகள் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குட்டைகள், குளங்கள் சிறு பாசன அமைப்புகளாக செயல்படுகிறது.

நமது மாவட்டத்தில் நீரை சேமித்து வைக்க அதிக அளவு நீர்நிலைகளை நமது முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அந்த நீர்வள ஆதார அமைப்புகளை நாம் முழுமையாக பாதுகாக்கவும், சீரமைக்கவும் வேண்டும். மழைநீரை சேகரித்து நிலத்தின் நீர் வள ஆதாரத்தை பெருக்கி நிலத்தடி நீர்வள ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும். எதிர்காலத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து இளைய தலைமுறையினராகிய நீங்கள் மரங்களை நட்டு மண்வளம் காத்து மழையை பெற்று வளம் பெறவும், நீர் மாசுபடாமல் பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டதை உயர்த்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு பற்றி தெரிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மேட்டு தெரு, கரிக்கினில் அமர்ந்த கோவில் தெரு வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தை அடைந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சுப்பிரமணியன், இந்தியன் ஆயில் கார்பரேஷன் சார்பில் சிறப்பு விருந்தினர்களாக மேசை பந்து வீராங்கனை ஷாமினி, கேரம் விளையாட்டு வீராங்கனை பரிமளா தேவி, கேரம் விளையாட்டு வீரர் ரமேஷ்பாபு, டென்னிஸ் வீராங்கனை ருஷ்மி சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story