தேன்கனிக்கோட்டை அருகே, குதிரை எட்டி உதைத்ததில் வாலிபர் சாவு


தேன்கனிக்கோட்டை அருகே, குதிரை எட்டி உதைத்ததில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 9 Sept 2019 3:30 AM IST (Updated: 9 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது குதிரை எட்டி உதைத்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வரதரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் முனிராஜ் (வயது 24). மது (22). இவர்கள் 2 பேரும் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பஜ்ஜேப்பள்ளி அருகே அவர்கள் வந்தபோது அந்த பகுதியில் குதிரை மீது அமர்ந்தவாறு ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

திடீரென அந்த குதிரை மிரண்டு மோட்டார்சைக்கிளில் சென்ற முனிராஜ், மது ஆகிய 2 பேரையும் கால்களால் எட்டி உதைத்தது. இதில் அவர்கள் இருவரும் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மது படுகாயம் அடைந்தார். இதற்கிடையே குதிரையில் வந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த மதுவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முனிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குதிரையை ஓட்டிச் சென்ற நபரை தேடி வருகிறார்கள். குதிரை எட்டி உதைத்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story