60 சதவீத மானியத்துடன் சூரிய கூடார உலர்த்தி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 60 சதவீத மானியத்துடன் சூரிய கூடார உலர்த்தி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்,
அறுவடை செய்த விவசாய விளைபொருட்களை உலர்த்துவதற்கு உதவும் சூரிய கூடார உலர்த்தி அமைக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம் 60 சதவீத மானியம் வழங்குகிறது. பொதுவாக வெளியே மண் தரையிலோ அல்லது சாலையிலோ விவசாய விளைபொருட்களை காய வைத்தால் தரைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியின் நிறம் மங்கியும், மேல் பகுதியில் உள்ள நிறம் வேறு மாதிரியாகவும் இருப்பதால், மொத்த பொருளின் தரம் குறைகிறது.
காயவைக்கும் பொருளுடன் கல், மண், மற்றும் தேவையற்ற பிற பொருட்கள் கலந்து மேலும் தரம் இழக்கிறது. எனவே, விவசாயிகள் சூரிய கூடார உலர்த்தியின் மூலம் விளைபொருட்களை உலர்த்தினால், விளைபொருட்களின் தரம் கூடுவதோடு மட்டுமல்லாமல் சந்தையில் அதன் மதிப்பும் கூடுகிறது. கூடார உலர்த்தியில் காயவைப்பதன் மூலம் விளைபொருட்கள் அதிக வெப்பத்தின் காரணமாக, குறைந்த நேரத்தில் காய்ந்து விடுகிறது. மேலே கூடார அமைப்பு இருப்பதனால், காற்று மற்றும் மழை போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது.
400 சதுரஅடி பரப்பளவு உள்ள கூடாரத்தில் சுமார் 1 டன் எடை உள்ள கொப்பரை தேங்காய், மஞ்சள், மிளகாய் ஆகியவற்றை காயவைத்து கொள்ளலாம். கொப்பரை தேங்காய்களை வைத்தால் 2 நாட்களில் முழுவதுமாக காய்ந்துவிடும். இந்த கூடாரத்தை 400 சதுரஅடி முதல் 1000 சதுரஅடி பரப்பளவில் அமைத்து கொள்ளலாம். 400 சதுரஅடி உள்ள சூரிய உலர்த்தி கூடாரத்தை அமைக்க சுமார் ரூ.3 லட்சம் செலவாகிறது.
1000 சதுரஅடி பரப்பளவில் அமைக்க சுமார் ரூ.7 லட்சம் வரை செலவாகிறது. இதில் டிரே இல்லாமலும் அதிக செலவில்லாத பொருள்களை கொண்டு தரை தளத்தினை அமைத்து செலவை குறைத்து கொள்ளலாம். சூரிய கூடார உலர்த்தி அமைக்க செலவாகும் தொகையில் 60 சதவீத தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 50 சதவீத தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 2019-20-ம் நிதியாண்டில் 4 சூரிய கூடார உலர்த்தி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அரசு மானியத்துடன் கூடிய சூரிய உலர்த்தி கூடாரத்தை அமைப்பதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. எனவே இதை விவசாயிகள் மானிய உதவி யுடன் சூரிய கூடார உலர்த்தியை அமைத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story