மயிலாடுதுறை பழங்காவிரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


மயிலாடுதுறை பழங்காவிரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Sep 2019 9:45 PM GMT (Updated: 8 Sep 2019 8:30 PM GMT)

மயிலாடுதுறை பழங்காவிரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை நகர் பகுதிக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள யானை குளம், திருவாரூர் சாலையில் உள்ள வெள்ளாந்தெரு குளம், கோர்ட்டுக்கு எதிரே உள்ள குளம், மாமரத்துமேடை குளம், வண்ணாங்குளம் உள்பட நகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த நிலையில் கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மயிலாடுதுறை காவிரி ஆற்றுக்கு வந்து சேர்ந்தது.

ஆனால் காவிரி ஆற்றில் இருந்து நகர் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. குளங்களுக்கு செல்லும் நீர்வழி பாதையில் செடி-கொடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், குளங்களுக்கு காவிரி நீர் சென்று சேர்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அருகே மூவலூரில் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் பழங்காவிரி என்ற பாசன வாய்க்கால் உள்ளது. இது மயிலாடுதுறை நகர் பகுதியில் சுமார் 6 கி.மீட்டர் தூரம் வரை செல்கிறது. இந்த பழங்காவிரியில் இருந்தும் நகர் பகுதியில் உள்ள பல்வேறு குளங்களுக்கு, வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரப்பும் வசதி உள்ளது. ஆனால் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்காவிரியில் செடி-கொடிகள் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. இதுவரை குடிமராமத்து பணி மூலம் அதனை அகற்றும் பணி நடைபெறவில்லை.

எனவே, பொதுப்பணித்துறையினர் குடிமராமத்து பணி மூலம் விரைந்து பழங்காவிரி வாய்க்காலில் புதர்போல மண்டி கிடக்கும் செடி-கொடிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடிமராமத்து பணியை அதன் நோக்கம் நிறைவேறும் வகையில் உரிய காலத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story