தனுஷ்கோடி சாலையில் அள்ள அள்ள குவியும் மணல்


தனுஷ்கோடி சாலையில் அள்ள அள்ள குவியும் மணல்
x
தினத்தந்தி 8 Sep 2019 10:15 PM GMT (Updated: 8 Sep 2019 9:32 PM GMT)

தனுஷ்கோடி சாலையில் அள்ள அள்ள மணல் குவிந்து வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி. இங்கு எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள அரிச்சல்முனை கடற்கரை வரை புதிதாக சாலையும் சாலையின் பாதுகாப்பு கருதி இருபுறமும் கற்களால் ஆன தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தொடர்ந்து சூறாவளிகாற்று வீசி வருகிறது.தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை மணல் குவிந்து சாலையை மூடி வருகிறது.அதிலும் குறிப்பாக அரிச்சல்முனை பகுதியில் தடுப்பு சுவரையும் தாண்டி மூடிவருகிறது. இந்த மணலை அவ்வப்போது அள்ளினாலும் அள்ளஅள்ள மீண்டும் சாலையில் மணல் குவிந்து வருகிறது. சாலையில் சுமார் 3 அடி உயரத்திற்கு மணல் குவியலாக இருந்து வருகிறது.

இதனால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா வாகனங்கள் மணலில் சிக்கி தவித்து வருகின்றன.

அரிச்சல்முனை பகுதியில் பலத்த காற்றால் சாலையை மணல் மூடாமல் இருக்க தடுப்புச்சுவரின் உயரத்தை கூட்டாமல் மட்டைகளை வைத்து மணலை தடுக்கும் பணி நடைபெற்று வருவது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியதாவது:- புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி வரை சாலை வந்த பிறகு தான் ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று வீசுவதும், இந்த காற்றின் வேகத்தின்போது மணல் புழுதியாக பறந்து வந்து சாலைகளை மூடும்.

இந்த ஆண்டு இடை விடாது தொடர்ந்து வீசி வரும் சூறாவளி காற்றால் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் தடுப்பு சுவரையே மறைத்து சாலைகள் முழுவதும் மணல் குவியலாக காட்சியளித்து வருகிறது.

மத்திய அரசால் தனுஷ்கோடி வரை போடப்பட்ட சாலைக்கு பாதிப்பு வராமல் இருக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி சாலைகளை மூடியுள்ள மணலை உடனடியாக அகற்றவும், மணலால் சாலைமூடாமல் இருக்கும் வகையில் தடுப்பு சுவர்களை உயரமாக கட்டவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கிறோம்.

தனுஷ்கோடி சாலையை பாதுகாக்க தவறினால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story