சாலையோர பள்ளத்தில், வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் - தப்பியோடிய டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு
சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர். இதில் தப்பியோடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுந்தோண்டி கிராமத்தில் இருந்து தேவமங்கலம் கிராமம் துரைராஜ் என்பவரது இல்லத்திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வாடகை வேன்பேசி கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள உறவினர்கள் நேற்று காலை தேவமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவமங்கலம் சுடுகாடு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மனைவி தேவி(48), வெங்கடேசன் மனைவி கஸ்தூரி(62), ஜோதி மனைவி சித்ரா(25), பாண்டியன் மனைவி இளவரசி(32), கண்ணன் மனைவி செல்வகுமாரி(45), சின்னப்பன் மனைவி சரோஜா(50), செல்வராஜ் மனைவி ஜெயம்(55), செல்லப்பன் மனைவி மலர்க்கொடி(40), ராமசாமி மனைவி வளர்மதி(50), கண்ணன் மனைவி செல்வராணி(40), சின்னையன் மனைவி சரோஜா(50), கோவிந்தன் மனைவி சின்னம்மாள்(62), சந்திரசேகரன் மகன் சஞ்சய்(16), நடராஜன் மகன் ராமச்சந்திரன்(18), இளையநாதன் மகன் அஸ்வின்(5) கொண்டான்குடி சுந்தரபாண்டியன் மனைவி வசந்தா(19) உள்பட 16 பேரும் காயம் அடைந்தனர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 வயது சிறுவன் அஸ்வின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வேன் டிரைவரான வாரியங்காவலை சேர்ந்த குமாரை(30) வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story