மாவட்ட செய்திகள்

புதிய படகு வாங்கி வந்தபோது கடலில் மூழ்கிய, ராமேசுவரம் மீனவர் உடல் மீட்பு + "||" + Drowned in the sea, Rameshwaram Fisherman Body Recovery

புதிய படகு வாங்கி வந்தபோது கடலில் மூழ்கிய, ராமேசுவரம் மீனவர் உடல் மீட்பு

புதிய படகு வாங்கி வந்தபோது கடலில் மூழ்கிய, ராமேசுவரம் மீனவர் உடல் மீட்பு
புதிய படகு வாங்கி வந்தபோது கடலில் மூழ்கிய ராமேசுவரம் மீனவர் உடல் அதிராம்பட்டினம் அருகே கரை ஒதுங்கியது. அவரது உடல் மீட்கப்பட்டது.
அதிராம்பட்டினம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நடராஜபுரத்தை சேர்ந்த மீனவர்கள் முனியசாமி(வயது 47), ரஞ்சித்குமார்(23), மதன்(25), இலங்கேஸ்வரன்(20), தரக்குடியான்(25), காந்தகுமார்(23), செந்தில்குமார்(31), முனீஸ்வரன்(24), உமாகண்ணன்(19), காளிதாஸ்(29) ஆகிய 10 பேரும் கடந்த 2-ந் தேதி கடலூருக்கு புதிய படகு வாங்க சென்றனர். அங்கிருந்து புதிய படகு வாங்கி கொண்டு 3-ந் தேதி ராமேசுவரத்துக்கு கடல் வழியாக புதிய படகில் புறப்பட்டனர்.

கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது வீசிய சூறாவளி காரணமாக படகு கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 10 மீனவர்களும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினர். இதில் காளிதாஸ், செந்தில்குமார் ஆகிய 2 மீனவர்கள் கடந்த 4-ந் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் மற்ற 8 மீனவர்களையும் தேடும் பணி தொடங்கியது.

கடந்த 5-ந் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழுமத்தினர் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது முத்துப்பேட்டை அருகே கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த முனியசாமி, தரக்குடியான், முனீஸ்வரன், ரஞ்சித்குமார் ஆகிய 4 பேரையும் உயிருடன் மீட்டு கரை சேர்த்தனர்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி முத்துப்பேட்டை அருகே 2 பேர் பிணமாக மிதப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு மல்லிப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் யார்? என உறவினர்கள் மூலமாக அடையாளம் காணப்பட்டது. இதில் இறந்தவர்கள் படகு வாங்கி வந்தபோது மாயமான மதன், காந்தகுமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் மாயமான இலங்கேஸ்வரன், உமாகண்ணன் ஆகிய 2 பேரையும் தேடும் பணியில் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதில் நேற்று முன்தினம் உமாகண்ணன் பிணமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் மாயமான இலங்கேஸ்வரன் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்தது. அவரது உடல் அதிராம்பட்டினம் அருகே உள்ள மறவக்காடு அலையாத்தி காடு பகுதியில் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.