கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடி வந்த இலங்கை வாலிபர் கைது - கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை
கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்திறங்கிய இலங்கை வாலிபரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்,
இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக வாலிபர் ஒருவர், ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அரிச்சல்முனை கடற் கரையில் நடந்துவந்து கொண்டிருந்த இலங்கை நபரை ராமேசுவரத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் இலங்கை வவுனியா செட்டி குளத்தைச் சேர்ந்த அருண்ராஜ் (வயது 24) என்றும், அவரது பெற்றோர் கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகம் வந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய தந்தை இறந்ததை தொடர்ந்து தாயார் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்று விட்டாராம். மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் சொந்த நாடான இலங்கை சென்று செட்டிகுளத்தில் உள்ள அவரது உறவினரது வீட்டில் தங்கியுள்ளார்.
இலங்கை குடியுரிமை அட்டை கேட்டு விண்ணப்பித்து இதுவரையிலும் கிடைக்காததால் மீண்டும் இந்தியா வருவதற்கு விரும்பி தலைமன்னாரில் இருந்து ரூ.15,000 கொடுத்து ஒரு கள்ளப்படகில் ஏறி வந்ததாகவும், அதில் இருந்த 2 பேர் தன்னை தனுஷ்கோடியில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அருண்ராஜ் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக தனுஷ்கோடி வந்திறங்கிய வாலிபருடன் வேறு யாரும் வந்துள்ளனரா? என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story