மாவட்ட செய்திகள்

புழலில் தாயுடன் வசித்த 3 வயது பெண் குழந்தை மர்மச்சாவு: 2-வது கணவர் அடித்து கொன்றாரா? போலீசார் விசாரணை + "||" + In Puzhal Lived with the mother 3 year old girl dies of mystery

புழலில் தாயுடன் வசித்த 3 வயது பெண் குழந்தை மர்மச்சாவு: 2-வது கணவர் அடித்து கொன்றாரா? போலீசார் விசாரணை

புழலில் தாயுடன் வசித்த 3 வயது பெண் குழந்தை மர்மச்சாவு:  2-வது கணவர் அடித்து கொன்றாரா? போலீசார் விசாரணை
புழலில் தாயுடன் வசித்து வந்த 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது தெரியவந்துள்ளது. அவரது 2-வது கணவர் அடித்து கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்குன்றம்,

சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 24). இவர் சுபகாரியங்களுக்கு பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கொடுங்கையூரில் ஒரு வீட்டில் வீட்டு விஷேசத்திற்காக பந்தல் போடும்போது, அந்த பகுதியை சேர்ந்த பவானி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.


இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாழினி (3) என்ற பெண் குழந்தையும், ராஜேஷ் (1) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் முதல் கணவரை பிரிந்து வந்த பவானி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஆசிப் (24) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், புழல், காவாங்கரையில் உள்ள கண்ணப்ப சாமி நகர் 4-வது தெருவில் ஒரு வாடகை வீட்டில் ஆசிப் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பவானி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் குழந்தை யாழினிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை யாழினி இறந்த தகவல் பவானியின் முதல் கணவரும், குழந்தையின் தந்தையுமான ரமேஷுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குழந்தையை பவானியும் ஆசிப்பும் சேர்ந்து கொலை செய்து விட்டார்கள் என்று புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அறிக்கையில், குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறக்கவில்லை என்றும், வயிறு, நெஞ்சு, நெற்றி ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இறந்தது என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டதா? அல்லது தவறி விழுந்து இறந்ததா? என குழந்தையின் தாய் பவானி மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஆசிப் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.