கேபிள் டி.வி. ஆபரேட்டர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
கேபிள் டி.வி. ஆபரேட்டர் கொலை வழக்கில் கூலித்தொழிலாளிக்கு செங்கல்பட்டு கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
செங்கல்பட்டு,
சென்னை குரோம்பேட்டை நவமணி தெருவை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 28). இவரது சகோதரர் ரமேஷ் பாபு. இவர்கள் இருவரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள். கடந்த 2002-ம் ஆண்டு குரோம்பேட்டை ஆரோக்கியசாமி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்ரீதர் (47) 5 பேருடன் எத்திராஜ் நடத்தி வரும் கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு சென்று நாங்கள் தோல் கம்பெனிகளில் மாமூல் வாங்குவதை நீ தான் போலீசில் காட்டிக் கொடுக்கிறாய் என்று கூறி அரிவாளால் எத்திராஜை வெட்டிக்கொலை செய்தனர். அப்போது ரமேஷ் பாபுவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. குரோம்பேட்டை போலீசார் ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கைது செய்தனர்.
அவர்கள் 6 பேர் மீதும் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதன். ஸ்ரீதருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 5 பேரும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போதே ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.
Related Tags :
Next Story