மடிக்கணினி கேட்டு மாநகராட்சி பள்ளியை பெற்றோருடன் முற்றுகையிட்ட முன்னாள் மாணவிகள்


மடிக்கணினி கேட்டு மாநகராட்சி பள்ளியை பெற்றோருடன் முற்றுகையிட்ட முன்னாள் மாணவிகள்
x
தினத்தந்தி 10 Sep 2019 9:45 PM GMT (Updated: 10 Sep 2019 7:58 PM GMT)

திருப்பூரில் மடிக்கணினி கேட்டு மாநகராட்சி பள்ளியை முன்னாள் மாணவிகள் தங்களது பெற்றோருடன் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2017-2018 மற்றும் 2018-2019-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு இது வரை மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இவர்கள் மடிக்கணினி கேட்டு சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்களிடம், விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் முன்னாள் மாணவர்களுக்கு வழங்குவதற்காக திருப்பூர் மாவட்டத்திற்கு மடிக்கணினிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எப்போது முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்கிற தகவல் இ்ல்லை. ஆனால் அரசிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோருடன் வந்து பள்ளி நுழைவு வாயிலின் முன் தங்கள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை கையில் வைத்துக்கொண்டு தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கேட்டு பள்ளியை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தலைமையாசிரியர் (பொறுப்பு) குழந்தைசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பள்ளிக்கு மடிக்கணினிகள் வந்துள்ளன. ஆனால் அவைகளை யாருக்கு வழங்கவேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை. வந்தவுடன் உங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற மாணவிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்திக்க சென்றனர். முதன்மை கல்வி அதிகாரி, ஆய்வு பணிக்காக வெளியில் சென்று விட்டதால் அவரது நேர்முக உதவியாளர் தனலட்சுமியை சந்தித்து பேசினா்.

அப்போது அவர் அரசு உத்தரவு வந்தவுடன் உடனடியாக உங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். என்றார். அதைக்கேட்டு சமாதானம் அடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோருடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதே போல் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி கேட்டு தலைமையாசிரியரை சந்திக்க வந்தனர். அவர் விடுமுறையில் இருந்ததால் உதவி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்களும் கலைந்து சென்றனர். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story