கரூர் அமராவதி பழைய பால பூங்கா பணி 3 மாதத்தில் முடிவடையும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
கரூர் அமராவதி பழைய பால பூங்கா பணி 3 மாதத்தில் முடிவடையும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் லைட்ஹவுஸ் அருகே உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே பழமையான பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டது. பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அதனை பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.1 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி கரூர் வைஸ்யா வங்கியின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. பாலம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதித்து, பாலத்தின் இருபுறமும் பாதுகாப்புக்காக உயர கம்பிகள், தடுப்புகள் பொருத்தப்படவுள்ளது. மேலும் பாலத்தில் நடுவில் ஆங்காங்கே பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.
சிறுவர்கள், பொதுமக்கள் மகிழும் வகையில் பொழுது போக்கு பூங்காவும் பாலத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. தற்போது பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளில் சில மாற்றங்களை அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், “கரூர் அமராவதி பழைய பாலத்தில் பூங்கா அமைக்கும் பணி இன்னும் 3 மாதத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தால் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகும்” என்றார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் அன்பழகன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் உதவி கலெக்டர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், கரூர் வைஸ்யா வங்கி பொதுமேலாளர் சாய்ராஜ், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் வி.சி.கே.ஜெயராஜ், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக கரூர் நகராட்சி 41-வது வார்டில் செல்லாண்டிபாளையம், 42-வது வார்டில் தோரணக்கல்பட்டி, 48-வது வார்டில் காளியப்பனூர் ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுக்களை பெற்றார். அதனை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “கரூர் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 32 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நெரூர், குளித்தலை பகுதியில் கதவணை கட்டுவதற்கு ஆய்வு பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கதவணைகள் அமைக்கப்படும்போது மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை என்பதே இருக்காது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பில் சுமார் 48,500 குடிநீர் இணைப்புகளுக்கு புதிய பைப்லைன் அமைக்கப்பட்டு மீட்டர் பொருத்தும் பணி நடைபெறுகிறது. தற்போது, நடைபெற்று வரும் 3 குடிநீர் திட்ட பணிகள் 3 மாதத்தில் முடிவுற்று குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்கப்படும்” என்றார். பின்னர் அம்மன்நகர், செங்குந்தர்நகர், பழனியப்பா தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார்.
Related Tags :
Next Story