அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளின் எடை, உயரத்தை கணக்கிட்டு அறிக்கை அனுப்ப வேண்டும்- கலெக்டர் பேச்சு


அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளின் எடை, உயரத்தை கணக்கிட்டு அறிக்கை அனுப்ப வேண்டும்- கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 10 Sep 2019 11:15 PM GMT (Updated: 10 Sep 2019 7:59 PM GMT)

அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளின் எடை, உயரத்தை கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு பணியாளர்கள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் என்பது வளர் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் ஒரு திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் கர்ப்பிணிகள் மற்றும் 5 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தி ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகளின் இறப்பு மற்றும் கர்ப்பிணிகளின் பேறுகால இறப்பு இல்லாத வளமான சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

இந்தியா முழுவதும் அங்கன்வாடி மையங்களின் மூலமாக இம்மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துத்துறைகளின் மூலம் ஊட்டச்சத்து பற்றிய கருத்துகளை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை கணக்கிடப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறித்து அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மாணவ -மாணவிகளுடன் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் தங்கள் மையத்திற்கு வரும் குழந்தைகளின் எடை உயரங்களை கணக்கிட்டு அக்குழந்தைகள் எந்தவிதமான ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்களின் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதேபோன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி முதல் நடுநிலைப் பள்ளிகள் வரை பயிலும் மாணவ -மாணவிகளின் எடை மற்றும் உயரத்தை கணக்கிட்டு அவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து பெற்றோரிடம் தெரியபடுத்தி அங்கன்வாடி பணியாளர்களும் பெற்றோருக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை கணக்கிட்டு அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள பிள்ளைகளின் நிலையினை அறிந்து கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உதவியாக இருக்கும்.

இப்பணிகளுக்கு வட்டார கல்வி அலுவலர்கள், ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கலெக்டர் செல்போன்களை வழங்கினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, துணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் செந்தில்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story