ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த கண்காட்சி


ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த கண்காட்சி
x
தினத்தந்தி 11 Sept 2019 4:00 AM IST (Updated: 11 Sept 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த கண்காட்சி தொடங்கியது.

ஊட்டி,

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த கண்காட்சி தொடங்கியது.

ஊட்டச்சத்து மாதம்

மத்திய அரசின் போஸன் அபியான் திட்டம் மூலம் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய நான் இன்று உறுதிமொழி ஏற்கிறேன். ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம், பச்சிளம் மற்றும் குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்க வழக்கங்களில் உள்ளது.

தேசிய ஊட்டச்சத்து இயக்கம், நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற, ஒவ்வொரு வீடு, பள்ளி, கிராமம், நகரமும் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நலவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை அறிய நான் உதவுவேன் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு பதாகைகள்

ஊட்டியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது வீடுகளில் சத்தான ஊட்டச்சத்து பொருட்களை சமைத்து எடுத்து வந்து கண்காட்சியில் வைத்தனர். இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக சத்துமாவு புட்டு, சுண்டல், கொழுக்கட்டை, பணியாரம் மற்றும் கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகளால் ஆன ஊட்டச்சத்துகள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் இருந்தன.

அதில், குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற எடை உள்ளதா என்று மாதம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். உணவு தயாரிக்கும் முன், குழந்தைகளுக்கு உணவூட்டும் முன் சோப்பு பயன்படுத்தி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மலம் கழிக்க கழிவறையை பயன்படுத்த வேண்டும். ரத்தசோகையை தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து மிக்க பிற உணவுகளை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மசினகுடி

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மசினகுடி அருகே உள்ள மாவனல்லா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நேற்று ஊட்டச்சத்து தினம் கொண்டாடபட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வட்டார திட்ட உதவியாளர் பாரதி ராஜா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஊட்டச்சத்து தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியில் மாணவர்கள் கைகளில் ஊட்டச்சத்து குறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஊட்டச்சத்து குறித்து கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர். பேரணி முடிந்ததும், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக பள்ளி வளாகத்தில் வைக்கபட்டிருந்து உணவு கண்காட்சியை பழங்குடியின மாணவர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் மசினகுடி கிராம நிர்வாக அலுவலர் ராதிகா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story