100 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மா ராஜினாமா ஏற்பு சட்டசபை தேர்தலில் சிவசேனா சார்பில் போட்டி?


100 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மா ராஜினாமா ஏற்பு சட்டசபை தேர்தலில் சிவசேனா சார்பில் போட்டி?
x
தினத்தந்தி 10 Sep 2019 11:30 PM GMT (Updated: 10 Sep 2019 10:36 PM GMT)

100 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மாவின் ராஜினாமாவை மராட்டிய அரசு ஏற்றது.

மும்பை, 

100 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மாவின் ராஜினாமாவை மராட்டிய அரசு ஏற்றது. அவர் சட்டசபை தேர்தலில் சிவசேனா சார்பில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்

மும்பையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றவர் போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மா. இவர் மீது லகான் பையா போலி என்கவுண்டர் வழக்கு மற்றும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டத்துடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டில் சிக்கினார். இதனால் பிரதீப் சர்மாவை கடந்த 2008-ம் ஆண்டு மாநில அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்தது.

ஆனால் லகான் பையா போலி என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு செசன்ஸ் கோர்ட்டு பிரதீப் சர்மாவை விடுதலை செய்தது.

அதன்பின்னர் அவர் மீண்டும் 2017-ம் ஆண்டு மும்பை போலீசில் சேர்க்கப்பட்டார். மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சில நாட்கள் பணி செய்த பிரதீப் சர்மா அதன்பிறகு தானே போலீசில், மிரட்டி பணம் பறித்தல் குற்றங்களை விசாரிக்கும் பிரிவின் சீனியர் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.

ராஜினாமா ஏற்பு

மும்பை போலீசில் 35 ஆண்டு காலம் பணியில் இருந்த பிரதீப் சர்மாக கடந்த ஜூலை மாதம் விருப்ப பணி ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது அவரது ராஜினாமாவை மாநில உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டு உள்ளது.

இருப்பினும் பிரதீப் சர்மாவுக்கு லகான் பையா போலி என்கவுண்ட்டர் வழக்கில் மராட்டிய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு வரும் வரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த ஒரு பணி ஓய்வு பலனையும் பெற முடியாது.

இந்த நிலையில், பிரதீப் சர்மா சிவசேனாவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே அவர் தனது பணியை ராஜினாமா செய்து உள்ளதாகவும், அவர் நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் நாலச்சோப்ரா தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story