மண்ணச்சநல்லூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில், 1½ லட்சம் கேபிள் இணைப்புகள் திடீர் துண்டிப்பு
மண்ணச்சநல்லூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் 1½ லட்சம் கேபிள் இணைப்புகள் திடீரென துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக தாசில்தார் மீது குற்றஞ்சாட்டி கலெக்டர் அலுவலகத்தை ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டனர்.
திருச்சி,
அரசு கேபிள் டி.வி. இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் அதிகமாக இருந்ததால் கடந்த 7 மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தனியார் கேபிள் டி.வி. இணைப்புக்கு மாறும் நிலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கேபிள் டி.வி. கட்டணமாக மாதம் ரூ.130 மற்றும் ஜி.எஸ்.டி சேர்த்து மொத்தம் ரூ.154 ஆக குறைத்து உத்தரவிட்டார்.
ஆனாலும் பலர் தனியார் கேபிள் இணைப்பில் இருந்து, அரசு கேபிளுக்கு மீண்டும் மாறும் எண்ணத்தில் இல்லை. திருச்சி மாவட்டத்திலும் பலர் தனியார் கேபிள் இணைப்புக்கு மாறிவிட்டனர். குறிப்பாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், சமயபுரம், லால்குடி பகுதியில் 1½ லட்சத்திற்கும் அதிகமான தனியார் கேபிள் இணைப்புகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி அந்த பகுதியில் உள்ள செட்டாப் பாக்சுக்கான கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் 1½ லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் கேபிள் டி.வி. தெரியவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கேபிள் ஆபரேட்டர்களிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கும் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அதே வேளையில் கேபிள் தாசில்தார் தூண்டுதல் பேரில் ஊழியர்கள்தான் கேபிள் இணைப்புகளை துண்டித்ததாக குற்றஞ்சாட்டி, 50-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
இது குறித்து ஆபரேட்டர்கள் தரப்பில் கூறுகையில், ‘அரசு கேபிள் டி.வி. இணைப்பு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.73-ம், ஆபரேட்டர்களுக்கு ரூ.60-ம் கிடைக்கிறது. இது போதுமானதாக இல்லை. மேலும் அரசு கேபிள் கட்டணம் அதிக அளவில் இருந்ததால் பலர் தனியார் கேபிள் இணைப்புக்கு மாறிவிட்டனர். முறிசி, லால்குடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 தனியார் நெட்வொர்க் இணைப்புகள் உள்ளன. அவற்றுக்கான இணைப்புகள்தான் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் 1½ லட்சம் வீடுகளுக்கு கேபிள் டி.வி. தெரியாது. எனவே, துண்டிக்கப்பட்ட இணைப்பை மீண்டும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதற்கிடையே நேற்று மாலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்களிடம் திருச்சி உதவி கலெக்டர் அன்பழகன், கேபிள் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செட்டாப் பாக்சுக்கான கேபிள் இணைப்பை தற்காலிகமாக கொடுப்பதற்கு அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று ஆபரேட்டர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story