திருவாரூர் பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம்


திருவாரூர் பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 Sept 2019 3:15 AM IST (Updated: 12 Sept 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்காததால் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 764 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதனை தொடர்ந்து குறுவை அறுவடை பணிகள் எந்திரங்கள் மூலமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடைக்கு தேவையான எந்திரங்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலமாகவும், தனியார் மூலமாகவும் வரவழைக்கப்பட்டு திருவாரூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரம் எக்டேர் பரப்பில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 25 சதவீதம் அறுவடை நடைபெற்றுள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் குறுவை அறுவடை பணிகள் நிறைவு பெறும் என விவசாயிகள் கூறினர். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 49 நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் வசதிக்காக தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏக்கருக்கு 25 முதல் 30 நெல்மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை என்றாலும் சராசரியான மகசூல் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story