மும்பையில் 129 நீர்நிலைகளில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மும்பை,
மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
மும்பை மக்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி வீதிகள் தோறும் சர்வஜனிக் மண்டல்கள் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 10 நாட்களும் மண்டல்களில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மும்பை நகரம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரமாண்ட கணபதி சிலைகளை தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனந்த சதுர்த்தி
குறிப்பாக பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா விநாயகர் சிலையை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரபலங்களும் வந்து தரிசனம் செய்தனர். லால்பாக் ராஜா விநாயகருக்கு தங்கம், வெள்ளி காணிக்கைகள் குவிந்தன.
மலாடு ஆர்.சி. பாடா பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த திருவள்ளுவர் விநாயகர் சிலை தமிழர்களை கவர்ந்தது. விநாயகர் மண்டல்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாக களை கட்டியிருந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்ச்சியான ஆனந்த சதுர்த்தி இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
129 நீர் நிலைகளில் ஏற்பாடு
ஆட்டம், பாட்டம் என முழு உற்சாகத்துடன் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு பிரமாண்ட ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். லால்பாக் ராஜா போன்ற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் போது லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். தமிழர் அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகளின் ஊர்வலமும் நடக்கிறது.
சிலைகள் கரைப்புக்காக 129 நீர் நிலைகளில் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் கிர்காவ், சிவாஜி பார்க், ஜூகு, அக்சா, வெர்சோவா, மார்வே ஆகிய கடற்கரைகளும் அடங்கும். இந்த கடற்கரைகளில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
50 ஆயிரம் போலீசார்
மும்பையில் ஆனந்த சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள். அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் கலவர தடுப்பு படையினர், மாநில ரிசர்வ் படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். வெடிகுண்டுகளை கண்டறியும் போலீஸ் படையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாசவேலைகள் நடப்பதை தடுக்க முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சில இடங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், கூட்ட நெரிசல் மேலாண்மை அவசியமாக உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, பெண்களிடம் அத்துமீறுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்
மேலும் நகரம் முழுவதும் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.
இதுதவிர கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சுகள், லேசான காயம் அடைபவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை மையங்கள், கடலில் தத்தளிப்பவர்களை மீட்பதற்கு மாநகராட்சி சார்பில் உயிர் காக்கும் வீரர்களும், தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story