துறையூர் அருகே வனப்பகுதியில், பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்


துறையூர் அருகே வனப்பகுதியில், பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்
x
தினத்தந்தி 13 Sept 2019 5:15 AM IST (Updated: 13 Sept 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவனை கைது செய்யக்கோரி போலீஸ்நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வனப்பகுதியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 26 வயதுடைய ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பள்ளி அமைந்துள்ள மலைக்கிராமத்துக்கு செல்ல போதிய பஸ்வசதி கிடையாது. அதனால் சுமார் அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதியில் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து தான் செல்லவேண்டும்.

கடந்த 9-ந்தேதி மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்ததும் அந்த ஆசிரியை வீட்டுக்கு செல்வதற்காக அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த மலைக்கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். அவன், ஆசிரியையை வழிமறித்து, அவரிடம் இருந்து பணத்தை பறித்ததுடன், அவரை பலாத்காரம் செய்ய முயன்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த சிறுவனிடம் இருந்து தப்பி மலைக்கிராமத்துக்கு மீண்டும் வந்துவிட்டார். பின்னர் இதுபற்றி கிராம மக்களிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள், துறையூர் போலீசாருக்கும், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், மறுநாள் காலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அதிகாரி சம்பந்தப்பட்ட மலைக்கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையே போலீசார், அந்த ஆசிரியையையும், சிறுவனையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து சமரசம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மலைக்கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு துறையூர் போலீஸ்நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை கைது செய்யவேண்டும். அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும், ஆசிரியைக்கும், அப்பகுதி பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story