குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முற்றுகை பாரதீய ஜனதா கட்சியினர் 100 பேர் கைது


குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முற்றுகை பாரதீய ஜனதா கட்சியினர் 100 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2019 5:11 AM IST (Updated: 13 Sept 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக கவர்னர் மற்றும் அமைச்சரவைக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மக்களுக்கு இலவச அரிசிதான் வழங்கவேண்டும் என்று அமைச்சரவையும், அரிசிக்கு பதிலாக வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என்று கவர்னரும் உறுதியாக உள்ளனர்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்தநிலையில் புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படாத மாதங்களுக்கான தொகை ரூ.9 ஆயிரத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

அரிசிக்கான பணத்தை வங்கியில் செலுத்தக்கோரி குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகை யிடும் விதமாக பாரதீய ஜனதா கட்சியினர் அலுவலகம் அருகே கூடினார்கள். அங்கிருந்து குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை சிறிது தூரத்திலேயே போலீசார் தடுப்புக்கட்டைகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அங்கேயே கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் போலீசாரின் தடுப்புக்கட்டையை தள்ளிக்கொண்டு குடிமைப்பொருள் வழங்கல்துறையின் அலுவலக வாசலுக்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தடையை மீறி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், முதலியார்பேட்டை செல்வம், நிர்வாகிகள் வி.சி.சி.நாகராஜன், கோவிந்தன், ஜெயந்தி, லட்சுமி, மூர்த்தி, அனிதா உள்பட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் சிறிது நேரம் கோரிமேடு காவல்நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Next Story