தூர்வாரும் பணியின்போது அம்புக்கோவில் இளமாக்கி குளத்தில் 9 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு - மழைநீரில் மூழ்கியது


தூர்வாரும் பணியின்போது அம்புக்கோவில் இளமாக்கி குளத்தில் 9 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு - மழைநீரில் மூழ்கியது
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:48 PM GMT)

கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கிராமத்தில் உள்ள இளமாக்கி குளத்தை தூர்வாரும்போது, அதில் 9 உறை கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது கனமழை பெய்ததால், அந்த உறை கிணறுகள் மழைநீரில் மூழ்கியது.

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமம் உள்ளது. மன்னர் காலத்தில் அம்புநாடு என்ற அழைக்கப்பட்ட 9 குப்பங்களை சேர்ந்த கிராமங்களின் தலைமையிடமாக அம்புக்கோவில் கிராமம் இருந்து உள்ளது. இங்கு கி.பி.12-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட தாயுனும்நல்லாள் உடனுறை பக்தலலிதேஸ்வரர் கோவில் உள்ளது. ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட 108 சைவ கோவில்களில் 108-வது கோவிலாகும்.

இந்த கோவில் அருகே இளமாக்கி குளம் உள்ளது. இந்த குளத்திற்கும் தனிவரலாறு சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் சிவாலயங்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளும் சைவ துறவிகள், அம்புக்கோவில் கிராமத்திற்கு வந்தபோது, இளமாக்கி குளத்தில் புனிதநீராடி செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. அவ்வாறு ஒருநாள் தோல் வியாதி உள்ள ஒரு சைவ துறவி இக்குளத்தில் நீராடிவிட்டு, எழுந்தபோது அவர் தோல் வியாதி நீங்கி இளமையுடன் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இக்குளம் இளமையாக்கி குளம் என அழைக்கப்பட்டு, நாளடைவில் அது மருவி இளமாக்கி குளம் என பெயர் பெற்றது. இக்குளத்தில் மன்னர் காலத்தில் நவக்கிரகங்களை குறிக்கும் வகையில் 9 உறை கிணறுகள் இருந்ததாகவும், தோ‌‌ஷ நிவர்த்தி வேண்டி இக்குளத்தில் உள்ள உறை கிணறுகளில் பொதுமக்கள் தீர்த்தம் எடுத்து சென்றதாகவும் வரலாறு உள்ளது. நாளடைவில் இக்குளம் தூர்ந்து போனதால், உறை கிணறுகள் இருப்பது வெளியே தெரியாமல் போனது.

இத்தகைய சிறப்புகள் கொண்ட இக்குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரத்தின் மூலம் குளத்தை தூர்வாரி கொண்டிருந்தபோது, குளத்தின் உள்ளே அடுத்தடுத்து கற்கள் கட்டமைப்புடன் கூடிய 9 உறை கிணறுகள் தூர்ந்துபோன நிலையில் மேலே தெரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராம மக்கள் உறை கிணறுகளை பார்க்க கூடினார்கள்.

அப்போது அப்பகுதியில் கனமழை பெய்தது. மேலும், குளத்திற்கு அதிக அளவில் மழைநீர் வந்தது. இதனால் குளத்தில் தெரிந்த 9 உறை கிணறுகளும் மீண்டும், மழைநீரில் மூழ்கியது. இதுகுறித்து கிராமமக்கள் சிலர் கூறுகையில், பல ஆண்டுகளாக வெளியே தெரியாமல் இருந்த உறை கிணறுகள், தூர்வாரும் பணியின் மூலம் வெளிப்பட்டு உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இந்த உறை கிணறுகளை வெளியே தெரியும் வகையில் அமைத்து, வறட்சி காலத்தில் மக்கள் இந்த உறை கிணறுகளை பயன்படுத்தும் வகையில், பழமை மாறமலும் கட்டமைக்க வேண்டும் என்றனர். அம்புக்கோவில் இளமாக்கி குளத்தை தூர்வாரும்போது குளத்தில் இருந்த 9 உறை கிணறுகள் வெளியே தெரிந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story