மாவட்ட செய்திகள்

பெருமாகவுண்டம்பட்டியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சேதம் : இளம்பிள்ளை ஏரி மதகு சீரமைப்பு + "||" + Rainwater damages houses at Permakavundampatti

பெருமாகவுண்டம்பட்டியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சேதம் : இளம்பிள்ளை ஏரி மதகு சீரமைப்பு

பெருமாகவுண்டம்பட்டியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சேதம் : இளம்பிள்ளை ஏரி மதகு சீரமைப்பு
இளம்பிள்ளை ஏரி மதகு உடைந்ததால் பெருமாகவுண்டம்பட்டியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சேதம் ஏற்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி மதகு சீரமைக்கப்பட்டது.
இளம்பிள்ளை,

இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இளம்பிள்ளை ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி வழியாக நடுவனேரிக்கு சென்றடையும்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பெய்தது. இதேபோல் இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் இளம்பிள்ளை ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது ஏரி மதகு உடைந்தது. இதையடுத்து இளம்பிள்ளை ஏரியில் இருந்து நடுவனேரிக்கு செல்லும் வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் வாய்க்காலில் குப்பை, கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டும், தூர்வாரப்படாமலும் இருந்ததால் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து பெருமாகவுண்டம்பட்டி குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது. அங்குள்ள வீடுகள், தறிக்கூடங்களில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் நாசம் ஆனது. தறிக்கூடங்களில் இருந்த சேலை உள்ளிட்ட துணிகள் தண்ணீரில் நனைந்து சேதம் ஆனது.


இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் வருவாய்த்துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் அங்கு சென்றனர். பொக்லைன் எந்திரம் மூலம் மதகு உடைப்பை சரிசெய்தனர். பின்னர் வாய்க்காலில் இருந்த அடைப்புகளை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

பின்னர் நேற்று துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மழைநீர் புகுந்த பகுதிகளுக்கு சென்றனர். அங்கு துப்புரவு பணிகளை செய்தனர். டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையே வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடிந்து விட்டது. தறிக்கூடங்களில் மழைநீரில் நனைந்த துணிகளை பணியாளர்கள் வெளியே எடுத்து வந்து வெயிலில் காய வைத்தனர்.

மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது பற்றி அறிந்ததும் வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி நேற்று அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த பொதுமக்களிடம் அவர் கூறும்போது, தண்ணீர் வீடுகளுக்குள் இனிமேல் புகுந்து விடாத அளவுக்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாக்கடை வசதி செய்து தரப்படும். முதல்-அமைச்சரிடம் இதுபற்றி எடுத்து கூறி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அவருடன் வீரபாண்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வருதராஜ், ஆணையாளர் திருவேரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லகுமார், தாசில்தார் ஆர்த்தி மற்றும் பலர் உடன் சென்றனர்.