பாம்பனில் தொடர்ந்து பச்சை நிறமாக காட்சியளிக்கும் கடல்


பாம்பனில் தொடர்ந்து பச்சை நிறமாக காட்சியளிக்கும் கடல்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 3:33 PM GMT)

பாம்பனில் கடல் தொடர்ந்து பச்சை நிறமாக காட்சியளித்து வருவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சை நிறமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் இயற்கையாகவே வளரும் கண்ணுக்கு தெரியாத ஒரு வகை பாசியின் இனப்பெருக்கம் காரணமாக கடல் நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கும் என்றும், ஓரிரு நாட்களில் அது தானாகவே சரியாகி விடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி அருகே தென்கடல் பகுதியில் இருந்து ரெயில் பாலம் வரையிலும் உள்ள கடல் பகுதி நேற்றும் பச்சை நிறமாகவே காட்சியளித்தது.

கடந்த 2 நாட்களை விட நேற்று பாம்பன் தென்கடல் பகுதி அதிக பச்சை நிறத்தில் தென்பட்டது. பாம்பன் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் கரையோரங்களில் பச்சை நிறமாக உள்ளதால் சிறிய மிதவைகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல ரெயில் பாலம் மற்றும் ரோடு பாலத்தில் நின்று வலை வீசியும், தூண்டில் மூலமும் மீன்பிடிப்பவர்களும் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். பாம்பன் கடலானது தொடர்ந்து பச்சை நிறத்தில் உள்ளதால் கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறும்போது, காற்றின் வேகம் அதிகரித்தாலோ, கடல் நீரோட்டம் அதிகமானாலோ இந்த பாசிகள் தானாக அழிந்துவிடும். அதன் பின்னர் கடல் நீர் இயல்பு நிலைக்கு வந்துவிடும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பகுதி 3 நாட்களுக்கும் மேலாக பச்சை நிறத்தில் காட்சியளிப்பது இதுவே முதல்முறையாகும் என்று தெரிவித்தனர்.

Next Story