சூளகிரி ஒன்றியம் பெரிய பேடப்பள்ளி ஏரியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு


சூளகிரி ஒன்றியம் பெரிய பேடப்பள்ளி ஏரியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Sep 2019 10:30 PM GMT (Updated: 14 Sep 2019 9:02 PM GMT)

சூளகிரி ஒன்றியம் பெரியபேடப்பள்ளி ஊராட்சியில் நடந்த குடிமராமத்து பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.

சூளகிரி,

சூளகிரி ஒன்றியம் பெரியபேடப்பள்ளி ஊராட்சியில் 10.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் ரூ.5 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு பணிகள் நடக்கிறது. அதேபோல சொரக்காயலுப்பள்ளி கிராமத்தில் 2.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இது ரூ.1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் மொத்தம் 100 ஏரிகள், 325 குளம், குட்டைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக 100 ஏரிகள் தூர்வாரும் பணி மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். 200 ஏரிகள் 325 குளம், குட்டைகள் என மொத்தம் 525 பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட இம்மிடிநாயகனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, துப்புகானப்பள்ளி, கானலட்டி, உள்ளட்டி, சாமனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி, ஆலூர், அத்திமுகம் ஆகிய 10 ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ஏரி தூர்வாரும் பணிகளும் 34 குளம், குட்டைகளில் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அந்த பகுதி விவசாயிகளிடம் ஏரி தூர்வாரப்பட்ட பணிகளையும், நீர்வரத்து கால்வாய்களில் நீர் வரத்து குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அக்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மின்வசதி அமைக்கப்பட்டுள்ளதை குறித்து நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள பொதுமக்களிடம் சாலை வசதி, பஸ் வசதி, தெருவிளக்கு, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து கேட்டறிந்தார்.

அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு பஸ் வசதி வேண்டும். அதேப்போல இங்குள்ள மக்கள் வேலைக்காக சூளகிரி, ஓசூர் பகுதிகளுக்கு செல்வதால் இந்த கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைக்கு நடந்து சென்று பஸ் மூலம் வேலைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. தங்கள் கிராமத்திற்கே நேரடியாக பஸ் வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் பேசிய கலெக்டர் போக்குவரத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக குருபரப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தை திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், சிகிச்சைக்கு வந்தவர்களிடம் சிகிச்சை அளிப்பது குறித்தும், மருத்துவர்கள் வருகை குறித்தும், மருந்து இருப்புகள் குறித்தும் இதர வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) நல்லசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமசந்திரன், விமல்ரவிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story