நாமக்கல்லில் வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்த விளக்க கூட்டம் - கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது
நாமக்கல்லில் வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான விளக்க கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.
நாமக்கல்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான விளக்க கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்கீழ் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை ‘ஓட்டர் ஹெல்ப்லைன்’ செல்போன் செயலியின் மூலம் பார்வையிட்டு உறுதி செய்யும் நடவடிக்கை குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன்மூலம் வாக்காளர்கள் தங்களது விவரங்களை எவ்வாறு சரிபார்ப்பது? என்பது குறித்தும் கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது. அதேபோல் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுசேவை மையங்களில் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர்களின் விவரங்களை எவ்வாறு சரிபார்ப்பது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ‘ஓட்டர் ஹெல்ப்லைன்’ செயலியை பயன்படுத்தி வாக்காளர் விவரங்களை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்குமாறு கலெக்டர் ஆசியா மரியம் அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இதேபோல் அனைத்து துறை அலுவலர்களுக்கான விளக்க கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story