ஆதித்ய தாக்கரேவுக்கு பார்சல் வந்திருப்பதாக கூறி ‘மாதோஸ்ரீ' ஊழியர்களிடம் நூதன மோசடி செய்த வாலிபர் கைது


ஆதித்ய தாக்கரேவுக்கு பார்சல் வந்திருப்பதாக கூறி ‘மாதோஸ்ரீ ஊழியர்களிடம் நூதன மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2019 10:45 PM GMT (Updated: 14 Sep 2019 10:03 PM GMT)

ஆதித்ய தாக்கரேவுக்கு ஆன்-லைன் மூலம் பார்சல் வந்திருப்பதாக கூறி ‘மாதோஸ்ரீ' ஊழியர்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

ஆதித்ய தாக்கரேவுக்கு ஆன்-லைன் மூலம் பார்சல் வந்திருப்பதாக கூறி ‘மாதோஸ்ரீ' ஊழியர்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆதித்ய தாக்கரேவுக்கு பார்சல்

மும்பை பாந்திரா பகுதியில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வசித்த வீடு ‘மாதோஸ்ரீ' இல்லம் என அழைக்கப்படுகிறது. தற்போது ‘மாதோஸ்ரீ' இல்லத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எனவே ‘மாதோஸ்ரீ' இல்லத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். சம்பவத்தன்று டெலிவரி பாய் என கூறிக்கொண்டு ஒருவர் ‘மாதோஸ்ரீ'க்கு வந்தார். அவர், சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை கொண்டு வந்திருப்பதாக கூறினார்.

இதுகுறித்து வீட்டில் இருந்த ஆதித்ய தாக்கரேவிடம் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அப்போது ஆதித்ய தாக்கரே ஆன்லைனில் பொருட்கள் எதுவும் ஆர்டர் செய்யவில்லை என கூறினார். இந்தநிலையில் பார்சல் கொண்டு வந்த வாலிபர் அங்கு இருந்து ஓடமுயன்றார். அவரை ‘மாதோஸ்ரீ'யில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் பிடித்தனர்.

விசாரணையில், அவர் ஆதித்ய தாக்கரேவுக்கு பார்சல் வந்திருப்பதாக கூறி ‘மாதோஸ்ரீ' ஊழியர்களிடம் பண மோசடியில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

4-வது முறை மோசடி

போலீசார் வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் பரேல் பகுதியை சேர்ந்த தீரஜ் மோரே (வயது19) என்பது தெரியவந்தது. அவர் டெலிவரி பாயாக வேலை பார்த்து உள்ளார். மேலும் அவர் இதற்கு முன் 3 முறை ஆதித்ய தாக்கரே ஹெட்போன், புத்தகம், கணினி மைக் போன்றவற்றை ஆர்டர் செய்து இருந்ததாக கூறி ‘மாதோஸ்ரீ' ஊழியர்களிடம் ரூ.8 ஆயிரத்து 500 மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 4-வது முறை மோசடியில் ஈடுபட முயன்ற போது அவர் சிக்கி உள்ளார்.

Next Story