உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை: போலி நெய் தயாரித்து விற்ற 7 பேர் சிக்கினர்


உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை: போலி நெய் தயாரித்து விற்ற 7 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 17 Sept 2019 4:30 AM IST (Updated: 17 Sept 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் போலியாக நெய் தயாரித்து விற்ற 7 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 500 லிட்டர் போலி நெய் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர்,

திருப்பூரை அடுத்த அவினாசி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் டால்டா மற்றும் பாமாயிலுடன் ரசாயனங்களைக் கலந்து போலி நெய் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத் தது.

தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் பி.விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் அவினாசி அருகே மங்கலம் சாலையில் வாடகை வாகனத்தில் அமர்ந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒருவர் ரூ.220-க்கு ஒரு லிட்டர் நெய் என விற்றவாறு வந்துள்ளார்.

அவரைப் பிடித்து விசாரித்ததில் திருப்பூர் ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியை சேர்ந்த குமார் என்பதும், டால்டா, பாமாயில் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு போலியாக நெய் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியில் உள்ள குமாரின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கு போலி நெய் தயாரிப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலியாக நெய் தயாரித்ததாக குமார் உள்பட 7 பேரைப் பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த வீடுகளில் ஆய்வு செய்து அங்கிருந்து 500 லிட்டர் போலி நெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடா்ந்து இதன் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கும் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

Next Story