வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு


வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 17 Sep 2019 10:15 PM GMT (Updated: 17 Sep 2019 8:11 PM GMT)

வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை பொது கணக்குக்குழு தலைவர் துரைமுருகன் கூறினார்.

வேலூர், 

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை 2018-2020-ம் ஆண்டிற்கான பொது கணக்குக்குழுவினர் நேற்று வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி மற்றும் சத்துவாச்சாரி, கிரீன் சர்க்கிள் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

காட்பாடி காந்திநகரில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.2 கோடியே 64 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை பார்வையிட்டனர். பின்னர் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள கிரீன்சர்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து சத்துவாச்சாரி பகுதி 3-ல் உள்ள அன்னை தெரசாநகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாளசாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டு, பணிகளின் விவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், நடைபெற்ற பணிகள் மீது உள்ள புகார்கள் குறித்தும் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் வேலூர் நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது குறித்தும், பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படும் வகையில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் குறித்தும், பணிகள் சரியாக நடைபெறாதது குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் பொதுகணக்குக்குழு தலைவர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கணக்கு தணிக்கைக்குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் விளக்கம் கேட்கப்பட்டது. சில விளக்கம் திருப்தியாக இருந்தது. சில விளக்கங்கள் பாதி திருப்தியாக இருந்தது. சில விளக்கங்கள் திருப்தியாக இல்லை. இதுகுறித்து மீண்டும் விளக்கம் அளிக்க கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலையில் தோண்டப்பட்ட பள்ளங் களை ஒப்பந்ததாரர்கள் சரியாக மூடாததால் பள்ளங்கள் உள்ளன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டி அப்படியே உள்ளது. கேட்டால் இன்னும் அதில் பணிகள் செய்யவேண்டி உள்ளது என்கிறார்கள். இந்த பள்ளங்களால் கஷ்டமான நிலை உள்ளது. இதுபோன்ற நிலை இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை வைத்து கலெக்டர் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் இந்த குழுவிற்கு அறிக்கை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதியபஸ்நிலையம் அருகில் உள்ள கிரீன் சர்க்கிளின் சுற்றளவு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருநெல்வேலியில் இதுபோன்று இருந்த ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் சுற்றளவை குறைத்தபின்னர் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. அதேபோன்று கிரீன் சர்க்கிள் சுற்றளவையும் குறைக்கவேண்டும்.

சத்துவாச்சாரி, கந்தனேரி போன்ற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேட்டிருக்கிறோம்.

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் குறித்து ஆய்வு செய்ய நாளை (19-ந் தேதி) ரெயில்வே கோட்ட மேலாளர் வருகிறார். அதன்பிறகு அதுபற்றி தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பொது கணக்குக்குழு உறுப்பினர்கள் ரா.ராஜேந்திரன், உதயசூரியன், ஆர்.நடராஜ், வி.பி.பி.பரமசிவம், பழனிவேல் தியாகராஜன், கே.பி.பி.பாஸ்கர், பி.வி. பாரதி, தூசி கே.மோகன், டி.ஆர்.பி.ராஜா, சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன், இணைசெயலாளர் பத்மகுமார், துணை செயலாளர்கள் தேன்மொழி, ரேவதி, எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், முகமதுஜான், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் வெட்டுவாணம் பகுதியில் உள்ள அகரம் ஆற்றுப்பகுதியிலும், ஆம்பூர் ரெயில்வே மேம்பாலம், மின்னூர் ஏரியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

Next Story