ஜல்சக்தி அபியான் திட்டத்தை செயல்படுத்துவதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3-வது இடம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
ஜல்சக்தி அபியான் திட்டத்தை செயல்படுத்துவதில் தரவரிசையில் இந்தியாவில் 3-வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம், ஜல்சக்தி அபியான் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் குளங்கள், சிறிய குட்டைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் பெரும்பாலும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார். கால்வாய் கிராமம் திருவரங்கப்பட்டியில் உள்ள திருவரங்கநேரி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சம்பந்தப்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையில் உள்ள 37 குளங்களில் ரூ.14 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன. இதே போன்று 87 சிறு பாசன குளங்கள், 472 சிறிய குட்டைகளில் பணிகள் நடக் கிறது. இதில் குளங்கள் தூர்வாரி செடிகள் அகற்றுதல், வரத்து கால்வாய்கள் சீரமைத்தல், மடைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. திருவரங்கநேரி குளத்தில் ரூ.42 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இந்த குளம் 160 ஏக்கர் பரப்பு கொண்டது.
இதன் மூலம் 130 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 3 கிலோ மீட்டர் தூர வரத்து கால்வாய், 2.6 கிலோ மீட்டர் மறுகால், 1910 மீட்டர் குளக்கரை சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். அடுத்த பருவமழை வரும் போது தண்ணீர் வீணாகாமல் குளங்களில் சேகரிக்கப்படும்.
மத்திய அரசின் ஆய்வின் படி நிலத்தடி நீராதாரம் குறைந்த உடன்குடி, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் பரிவில்லிகோட்டை ஆகிய 3 பிர்க்காக்களில் ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சிறிய குளங்களை தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்குதல், மரக்கன்று நடுதல், விவசாயிகள் நவீன தொழில்நுட்பம் மூலம் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இந்த பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
ஜல்சக்தி அபியான் திட்டம் இந்தியா முழுவதும் 254 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது, எவ்வளவு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது, விவசாயிகள் எவ்வளவு பேர் இந்த திட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. இன்னும் 15 நாட்கள் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் முதல் இடத்தை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இது தவிர தனியார் பங்களிப்புடன் 50 குளங்களும், ஊருக்கு நூறு கை என்ற திட்டத்தில் குட்டைகள் தூர்வாரும் பணியும் நடந்து வருகிறது.
தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலை செடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், திருவரங்கநேரி விவசாய பாசன சங்க தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story