நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்னை கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்


நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்னை கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:00 AM IST (Updated: 18 Sept 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்னை கல்லூரி மாணவி காதலனுடன் நேற்று தஞ்சம் அடைந்தார்.

நெல்லை, 

சென்னை பூந்தமல்லி பலராமன் நகரை சேர்ந்தவர் ரகு. இவருடைய மகள் அஸ்வதா (வயது 19). இவர் சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடைய காதல் கணவர் தென்காசி அருகே உள்ள இடைகால் சங்குபுரத்தை சேர்ந்த சின்னராஜ் (21) என்பவருடன் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

சென்னையில் எங்களது வீட்டுக்கு எதிரே சின்னராஜ் தங்கி இருந்து கார் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நாங்கள் அவ்வப்போது சந்தித்து பேசியதால் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் எனக்கும், சின்னராஜிக்கும் தென்காசி பெருமாள் கோவிலில் கடந்த 15-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் என்னுடைய தந்தை ரகு, பூந்தமல்லி போலீசார் மூலம் எங்களை மிரட்டி வருகிறார். தென்காசி அனைத்து மகளிர் போலீசார் மூலம், பூந்தமல்லி போலீசாரிடம் பேசியும் மிரட்டல் தொடருகிறது. எனவே எனக்கும், என்னுடைய கணவருக்கும் உரிய பாதுகாப்பு தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story