தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி சங்கரன்கோவிலில் கடையடைப்பு
சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி தனி மாவட்டம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு வரவேற்புகள் இருந்தாலும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளை தென்காசி மாவட்டத்துடன் சேர்க்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று சங்கரன்கோவில் மாவட்டம் கோரிக்கை இயக்கத்தினர், அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோரை இணைத்து தனி மாவட்டம் கோரிக்கையை முன்வைத்து களத்தில் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்கத்தினர் அமைச்சர் ராஜலட்சுமி, மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சங்கரன் கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சங்கரன்கோவிலில் கடையடைப்பு போராட்டம், பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலில் உள்ள கடைகளில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு தலைமையில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
இதேபோல் திருவேங்கடம், குருவிகுளம், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம், தேவர்குளம், கலிங்கப்பட்டி, ஒத்தக்கடை, சுப்புலாபுரம், கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
அதன்படி நேற்று சங்கரன்கோவிலில் உள்ள நகைக்கடைகள், காய்கறி மார்க்கெட் கடைகள், அனைத்து மளிகை கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், சலூன்கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் திருவேங்கடம் பகுதியில் உள்ள ஏராளமான கடைகளுக்கும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆட்டோக்களும் ஓடவில்லை.
மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சங்கரன்கோவிலில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. அவற்றில் பணியாற்றிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சங்கரன்கோவில் மாவட்டம் கோரிக்கை இயக்கத்தினர், அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆதிநாராயணனிடம், சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
கடையடைப்பு போராட்டம், பேரணியில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் திவ்யா ரெங்கன், நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சங்கரசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், செல்வம், வர்த்தக சங்க துணை தலைவர் குருநாதன், ம.தி.மு.க. மாநில மருத்துவ அணி செயலாளர் சுப்பாராஜ், பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள், விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story