ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா? சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு


ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா? சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sep 2019 12:00 AM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

ஏரியூரில் ஹெல்மெட் போடவில்லை என கூறி மாணவனின் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் வந்தபோது அந்த மாணவனிடம் ஹெல்மெட் ஏன் போடவில்லை? என கேட்டு போலீசார் அந்த மாணவனின் சைக்கிளை பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியது. இது பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, ஹெல்மெட் கேட்டு மாணவனின் சைக்கிளை பறிமுதல் செய்யவில்லை, என்று கூறினர். ஏரியூரில் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவன் கைகளை சைக்கிளில் இருந்து தூக்கி மேலே காண்பித்தபடி அடிக்கடி அந்த சாலையில் சென்று கொண்டிருந்தான். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனை அழைத்து சைக்கிளுடன் அந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார், என போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஏரியூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு நேற்று சம்பவ இடத்துக்கு சென்று அந்த மாணவனிடமும், அக்கம் பக்கத்து கடைக்காரர்களிடமும் விசாரித்தார்.பின்னர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு கூறும்போது, கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டியதால் ஏதேனும் விபத்து நேரும் என்பதன் காரணத்தாலும், பள்ளி மாணவனுக்கு எச்சரிக்கை தருவதற்காகவும் சைக்கிளை பிடித்து வைத்திருந்து அரைமணி நேரத்திற்குப் பின்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எச்சரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் இது. பள்ளி மாணவனின் பாதுகாப்பிற்காக அவனை எச்சரிக்கும் நோக்கத்துடனேயே சப்-இன்ஸ்பெக்டர் இவ்வாறு செய்துள்ளார். மாணவன் மீது எந்த வழக்கும் பதியவில்லை. மேலும் ஹெல்மெட்டோ, லைசென்சோ கேட்கவும் இல்லை, என்றார்.

Next Story