சூளகிரி அருகே, மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி - கிராம மக்கள் பீதி


சூளகிரி அருகே, மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி - கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 18 Sep 2019 10:00 PM GMT (Updated: 18 Sep 2019 9:43 PM GMT)

சூளகிரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்ன தியாகரசனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். தொழிலாளி. இவரது மனைவி சாதம்மா(வயது 43). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 4 நாட்களாக சாதம்மாவுக்கு மர்ம காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சாதம்மாவுக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சாதம்மாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ராமப்பா என்பவரது மனைவி கதிரம்மாவும்(49) மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சூளகிரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கதிரம்மாவை சிகிச்சைக்காக உறவினர்கள் அழைத்து சென்றபோது, அங்கு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்று கதிரம்மா தரப்பினர் குற்றம் சாட்டினர். சின்னதியாகரசனபள்ளியில் சிலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும், இப்பகுதியில் மருத்துவ குழு அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story