மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.6¼ கோடியில் 19 பணிகள் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.6¼ கோடியில் 19 பணிகள் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 19 Sept 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.6¼ கோடியில் 19 பணிகள் நடைபெற்று வருகின்றன என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

மோகனூர்,

மோகனூர் பள்ளவாய்க்காலில் நீர்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வாய்க்காலின் கடைமடை பகுதி வரை செல்லவில்லை என்பதால் தற்போது குடிமராமத்து திட்டத்தின் மூலம் பாசன வாய்க்காலில் 598 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வாய்க்காலின் கடைமடை பகுதி வரை தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளவாய்க்கால் மொத்த நீளம் 3,800 மீட்டர். இதில் ஏற்கனவே 1,500 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் வாய்க்காலாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆண்டு 598 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் வாய்க்காலாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் மோகனூர் பள்ளவாய்க்கால் கடைமடை விவசாயிகள் நலசங்க விவசாயிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் ரூ.6 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மொத்தம் 19 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 5 பணிகள் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் புரனமைக்கும் பணிகளும், 8 பணிகள் காவிரியிலிருந்து பிரிந்து வருகின்ற ராஜாவாய்க்காலில் சென்ற ஆண்டு வெள்ளத்தால் கரை உடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளும், மேலும் கடைசியாக மோகனூர் பள்ளவாய்க்கால் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைத்து முழுமையாக சீரமைத்து, சிமெண்டு கால்வாய் அமைத்திடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளவாய்க்கால் சீரமைக்கும் பணியானது மொத்தம் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் 598 மீட்டர் நீளத்திற்கு சிமெண்டு கால்வாய் அமைக்கப்படவுள்ளது, அதில் 498 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு, 100 மீட்டர் நீளத்திற்கு மட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழையின் காரணமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகளில் நீர்தேங்கியுள்ளதால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மழை பொழிவு மிகவும் குறைவாகும். பெய்கின்ற மழைநீரை அருகில் உள்ள குளம் மற்றும் ஏரிகளில் சேகரிப்பதால் பாசன கிணறுகளில் நீர் ஊற்றெடுக்கும். இந்த நீரை கொண்டு விவசாயம் செய்யமுடியும். குடிமராமத்து திட்டப்பணிகள் மூலமாக ராஜாவாய்க்காலை சீரமைப்பதன் காரணமாக மேட்டூரில் திறந்து விடப்படும் நீரானது ராஜாவாய்க்காலின் கடைமடை பகுதி வரை விரைவாக 10 நாட்களுக்குள் சென்று சேரும். இதற்காக விவசாயிகள் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு மிகுந்த ஆதரவு தெரிவித்து, ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

ஆய்வின்போது மோகனூர் பள்ளவாய்க்கால் கடைமடை விவசாயிகள் நலசங்க தலைவர் சேனாபதி, துணைத்தலைவர் அஜித்தன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் யுவராஜ் உள்பட விவசாயிகள் உடன் சென்றனர்.

Next Story