சேலம் கன்னங்குறிச்சியில் பரபரப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு-சாலை மறியல் - தீக்குளிக்க முயன்றவர் உள்பட 42 பேர் கைது


சேலம் கன்னங்குறிச்சியில் பரபரப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு-சாலை மறியல் - தீக்குளிக்க முயன்றவர் உள்பட 42 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2019 10:45 PM GMT (Updated: 18 Sep 2019 11:10 PM GMT)

சேலம் கன்னங்குறிச்சியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டியிருந்த வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்றவர் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னங்குறிச்சி, 

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தில் 11 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். இவர்கள் சுமார் 70 ஆண்டுகளாக குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு காலியாக உள்ள இடத்தில் ஏற்கனவே பேரூராட்சி சார்பில் மக்களின் பயன்பாட்டுக்காக கழிவறை, பூங்கா ஆகியவை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பூங்காவை மேலும் பெரிதுப்படுத்த இருப்பதால், அங்கு கட்டியுள்ள வீடுகளை காலிசெய்யுமாறு சம்மந்தப்பட்ட நபர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடத்தை காலி செய்ய முடியாது எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையொட்டி 11 குடும்பத்தினரும் தங்களது வீடுகளை காலி செய்து கொடுக்குமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இடத்தை காலி செய்யாமல் குடியிருந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிப்பதற்கு சேலம் டவுன் தாசில்தார் மாதேஸ்வரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி, போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் வந்தனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்க முயன்றபோது, அங்கு வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பல ஆண்டுகளாக தாங்கள் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இதனால் வீடுகளை இடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், வீடுகளை இடித்தால் தீக்குளிப்போம் என்று சில பெண்கள் ஆவேசத்துடன் கூறினர். அந்த சமயத்தில் ஒருவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, சில பெண்கள், அதிகாரிகளின் கால்களில் விழுந்து, எங்களது வீடுகளை இடிக்க வேண்டாம். சில நாட்கள் அவகாசம் கொடுங்கள் எனக்கூறி கதறி அழுதனர்.

இருப்பினும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் தீக்குளிக்க முயன்றவர் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதையடுத்து போலீஸ் உதவியுடன் 11 வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள் இடிக்கும் பணிகள் தொடங்கியது. அப்போது, வீட்டிற்குள் இருந்த பொருட்களை சம்மந்தப்பட்டவர்கள் வெளியே எடுத்தனர். முடிவில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த அனைத்து வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் கன்னங்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story