சமயபுரம் போலீசாரால் துப்பு துலங்கியது: இளம்பெண்ணை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது


சமயபுரம் போலீசாரால் துப்பு துலங்கியது: இளம்பெண்ணை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2019 4:45 AM IST (Updated: 20 Sept 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சமயபுரம் போலீசாரால் துப்பு துலங்கப்பட்டு, இளம்பெண்ணை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமயபுரம்,

புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகுறிச்சியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி சிவரெத்தினம் (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகிறது. 12 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரெங்கசாமி இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து சிவரெத்தினம் சமயபுரம் அருகே நரசிங்கமங்கலத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டில் மகனை விட்டுவிட்டு, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை தனது மகனை பார்ப்பதற்காக சமயபுரத்திற்கு வந்து செல்வார்.

கடந்த சில நாட்களாக சிவரெத்தினம் வராததை கண்டு, அவருடைய அண்ணன் வெள்ளக்கோவிலில் அவர் வேலை பார்த்த இடம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் அவரைப்பற்றி விசாரித்தார். அவர் எங்கே சென்றார் என தெரியாமால் அதிர்ச்சியடைந்த அவர், கடந்த 16-ந்தேதி சமயபுரம் போலீஸ் நிலையத்தில் மாயமான சிவரெத்தினத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் சிவரெத்தினத்தின் செல்போன் எண்ணை ஆராய்ந்து பார்த்தனர். அவருக்கு கடைசியாக தொடர்ந்து வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, அவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மகன் ஏழுமலை (27) என்பது தெரியவந்தது.

உடனடியாக சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் திருவண்ணாமலைக்கு சென்று அங்கு வீட்டில் பதுங்கியிருந்த ஏழுமலையை கைது செய்து சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர், சிவரெத்தினத்தை அடித்து கொலை செய்து தண்டராம்பட்டு அருகே ரெயில் தண்டவாளத்தில் வீசியதாக தெரிவித்தார். மேலும் ஏழுமலை அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நானும் சிவரெத்தினம் வேலைப்பார்த்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தேன். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து வெள்ளக்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு சிவரெத்தினத்தை அடிக்கடி எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். சிவரெத்தினத்திடம் செலவுக்கு அடிக்கடி பணமும் பெற்றேன். இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் கேட்டபோது வாய்த்தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த நான் அவரை அடித்து கொலைசெய்தேன். கொலை செய்தது யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காக அவரது உடலை தண்டராம்பட்டு அருகில் உள்ள பச்சக்குப்பம் என்ற ரெயில் நிலைய தண்டவாளத்தில் வீசி சென்று விட்டேன். நான் அடிக்கடி சிவரெத்தினத்திற்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து சமயபுரம் போலீசார் என்னை கைதுசெய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடம் வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், ஏழுமலையை சமயபுரம் போலீசார் அங்கு ஒப்படைத்தனர்.

Next Story