உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமைச்சர்கள் பங்கேற்பு


உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Sep 2019 11:15 PM GMT (Updated: 20 Sep 2019 5:23 PM GMT)

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்துவைத்து மலர் தூவி வரவேற்றனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை நீராதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதி ஆற்றை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதையடுத்து அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமராவதி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அதன் முழுகொள்ளளவை நெருங்கியது.

இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பிவைத்தனர்.

அதன்படி அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று காலை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரிய தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டனர். அதைத்தொடர்ந்து மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

அதன்படி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவில் 1,384 ஏக்கரும், மடத்துக்குளம் தாலுகாவில் 6 ஆயிரத்து 136 ஏக்கரும், தாராபுரம் தாலுகாவில் 8 ஆயிரத்து 416 ஏக்கரும், கரூர் மாவட்டம் கரூர் தாலுகாவில் 2 ஆயிரத்து 219 ஏக்கரும், அரவக்குறிச்சி தாலுகாவில் 11 ஆயிரத்து 232 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவில் 1,781 ஏக்கரும், தாராபுரம் தாலுகாவில் 12 ஆயிரம் ஏக்கரும், மடத்துக்குளம் தாலுகாவில் 11 ஆயிரத்து 469 ஏக்கரும் என மொத்தம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன.

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நேற்று முதல் வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி வரையும், பழைய ஆயக்கட்டில் 8 பழைய வாய்க்கால் பாசனத்திற்கு நேற்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி வரையும், 10 பழைய வாய்க்கால் பாசனத்திற்கு நேற்று முதல் வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி வரையும் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றின் மூலமாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அத்துடன் அமராவதி ஆற்றை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று முதல் மின்உற்பத்தி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, தாராபுரம் எம்.எல்.ஏ. காளிமுத்து, தாசில்தார் தயானந்தன், கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் தாமோதரன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் பாபு, சக்திவேல், குமரவேல் உள்ளிட்ட பொதுப்பணித்துறையினர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த நீர் இருப்பு 86.13 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 285 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு அமராவதி ஆற்றில் 1,800 கன அடியும், பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Next Story