சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கோரி, உறவினர்கள்-பல்வேறு அமைப்பினர் சாலைமறியல்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு, வாய்பேச முடியாத நிலையில் உள்ளார். தேனியில் உள்ள ஒரு மனநல காப்பகத்துக்கு சென்று வந்த நிலையில் கடந்த 19-ந்தேதி சிறுமியை யாரோ மர்மநபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமியின் உறவினர்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேனியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேற்று குவிந்தனர்.
பின்னர் அவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஓடி வந்து, அங்கும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் வீரபாண்டியன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ‘தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. காப்பகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்பேரில், சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சிக்கி உள்ளார். பலாத்காரம் செய்தவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story