ரெட்டிச்சாவடியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: தொழில் துறை சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் சவால்
தொழில் துறை சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று ரெட்டிச்சாவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் சவால் விடுத்து பேசினார்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ரெட்டிச்சாவடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். கூட்டுறவு வங்கி தலைவர் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தெய்வேந்திரன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமதாஸ், நிர்வாகி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணா வழியில் வந்துள்ள அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. அ.தி.மு.க.வை பார்த்து மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் உள்ளார். சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றபோது தமிழகத்தில் முதலீடு செய்ய பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தொழில்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் அந்த துறை பற்றி எனக்கு முழுவதும் தெரியும். ஆகையால் தொழில் துறை சம்பந்தமாக ஒரே மேடையில் மு.க.ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னுடன் விவாதிக்க அவர் தயாரா?.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது. ஆனால் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி காலத்தில் வெறும் ரூ.33 ஆயிரம் கோடிதான் அன்னிய நேரடி முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசை குறை கூறி வருகிறார். தொழில்துறை பற்றி எதுவும் தெரியாத முன்னாள் அமைச்சர் பொன்முடி, இதைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
கார் உற்பத்தியில் உலகளவில் முதல் 10 இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இதன் மூலம் 40 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தற்போது தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் 6 ஆயிரம் பேருக்கு பயிற்சி கொடுக்க தமிழக அரசு ரூ.39 கோடி மானியமாக வழங்கியுள்ளது. உலக அளவில் தொழில்துறையில் 24 லட்சம் பேர் வேலை செய்வது தமிழகத்தில்தான்.
தமிழகத்தில் 32 ஆயிரத்து 720 தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் இந்திய அளவில் வேலைவாய்ப்பு அதிக அளவில் வழங்கி வரும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தற்போது தமிழகத்தில் 67 நிறுவனத்தினர் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். இதில் 29 நிறுவனங்களில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு எந்த எந்த தொழிற்சாலையை யார்- யார்? கொண்டு வந்தார்கள் என்பதனை நாங்கள் கூற தயார். இதனை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா?.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் குமரன், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் சேவல் குமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பெருமாள் ராஜா, நகர துணை செயலாளர் கந்தன், ஆத்ம குழு தலைவர் சபரி, முன்னாள் கவுன்சிலர்கள் மணி, தமிழ்ச்செல்வம், அன்பு, முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story