87 தொழிற்சாலைகளுக்கு ரூ.5.41 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


87 தொழிற்சாலைகளுக்கு ரூ.5.41 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 23 Sep 2019 9:56 PM GMT (Updated: 23 Sep 2019 9:56 PM GMT)

சேலம் திருமணிமுத்தாற்றில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதாக 87 தொழிற்சாலைகளுக்கு ரூ.5.41 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாநகரில் பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, குகை, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாய மற்றும் சலவை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் சேலத்தில் உள்ள திருமணிமுத்தாற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சேலத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் 2015-ம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவானது, சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமணிமுத்தாறு நதி, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி பெற்ற சாய மற்றும் சலவை தொழிற்சாலைகள், சேகோ தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையின்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வரையறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் இழப்பீட்டு கணக்கீட்டின் அடிப்படையில் விதி மீறிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 77 சாய மற்றும் சலவை தொழிற்சாலைகள் மற்றும் 10 சேகோ தொழிற்சாலைகள் என மொத்தம் 87 நிறுவனங்களுக்கு ரூ.5 கோடியே 41 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தொகையை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் ஒவ்வொரு நாட்களுக்கும் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் திருமணிமுத்தாற்றில் சாய தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி மத்திய, மாநில அரசு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றியதாக 87 தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அந்த தொழிற்சாலைகளை கணக்கீடு செய்து மொத்தம் ரூ.5 கோடியே 41 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் உடனடியாக செலுத்த வேண்டும். எனவே, சாய மற்றும் சேகோ தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை திருமணிமுத்தாற்றில் கலந்துவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Next Story