வியாசர்பாடியில் பிரசாதத்தில் விஷம் கலந்து பேராசிரியர் கொலை - தீர்த்து கட்டிய அரசு ஊழியர் கைது


வியாசர்பாடியில் பிரசாதத்தில் விஷம் கலந்து பேராசிரியர் கொலை - தீர்த்து கட்டிய அரசு ஊழியர் கைது
x
தினத்தந்தி 24 Sep 2019 11:15 PM GMT (Updated: 24 Sep 2019 4:10 PM GMT)

வியாசர்பாடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட பேராசிரியர் பணத்தை திருப்பி கேட்டதற்கு, கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர்,

சென்னை காசிமேடு ஜி.என்.செட்டித் தெருவை கார்த்திக் (வயது 34). இவரது மனைவி சரண்யா (29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கார்த்திக் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்கை கல்லூரி நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்தார். இதைத்தொடர்ந்து வியாசர்பாடி புதுநகர் ஏ.பிளாக்கை சேர்ந்த வேலாயுதம் (48) என்பவர் கார்த்திக்குக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் வாங்கி உள்ளார்.

ஆனால் வேலாயுதம் கூறியபடி கார்த்திக்குக்கு வேலை வாங்கி தராமல் தாமதம் செய்து உள்ளார். இதனால் கார்த்திக் தான் கொடுத்த பணத்தை பலமுறை திருப்பி கேட்டும், வேலாயுதம் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலாயுதம் கார்த்திக்குக்கு போன் செய்து அரசு வேலை கிடைத்து விட்டதாகவும், வந்து பணிஆணையை தன்னுடைய வீட்டில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அழைத்துள்ளார். இதை உண்மையென்று நம்பி கார்த்திக்கும் அவரது மனைவி சரண்யாவும் வேலாயுதம் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது வேலாயுதம் சாய்பாபா கோவில் பிரசாதம் என்று கூறி கார்த்திக், சரண்யா ஆகிய 2 பேருக்கும் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டுவிட்டு, கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எம்.கே.பி.நகர் அருகே சென்றபோது, மயங்கி விழுந்தனர்.

உடனே எம்.கே.பி. நகர் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்தார். சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து தலை மறைவான வேலாயுதத்தை தேடி வந்தனர்.

இதற்கிடையே, தலைமறைவாக இருந்த வேலாயுதத்தை எம்.கே.பி. நகர் போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து வேலாயுதம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

சென்னை கிண்டியில் உள்ள மாநில அரசு உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறேன். கார்த்திக் எனக்கு அறிமுகமான போது, வேலை பார்த்த இடத்தில் அவருக்கு வேலை போனதை அறிந்து, கார்த்திக்கிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் வாங்கினேன். ஆனால் நான் வாக்குறுதி கொடுத்தது போல் கார்த்திக்குக்கு வேலை வாங்கி தரமுடியவில்லை. அவர் கொடுத்த பணத்தையும் என்னால் திருப்பித் தரமுடியாமல் இருந்தேன். ஆனால் கார்த்திக் என்னிடம் பணத்தை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் கார்த்திக்கை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். எனவே நான் வேலை செய்யும் ஆராய்ச்சி மையத்தில் பயன்படுத்தப்படும் விஷத்தன்மை கொண்ட பொடியை கோவில் பிரசாதத்தில் கலந்து கொடுக்க முடிவு செய்தேன்.

உடனே கார்த்திக்குக்கு போன் செய்து வேலை கிடைத்துவிட்டதாகவும், உடனே தன்னிடம் வந்து பணி நியமன ஆணையை வந்து வாங்கி கொள்ளுமாறும் கூறி அவரை என் வீட்டிற்கு அழைத்தேன். கார்த்திக் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் வீட்டிற்கு வந்ததும் அங்கு தயாராக வைத்திருந்த விஷப்பொடி கலந்து வைத்த பிரசாதத்தை அவர்களுக்கு கொடுத்தேன். அதன்பிறகு அவர்கள் இருவரும் இறந்து விடுவார்கள் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து தலைமறைவாக இருந்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதன் பின்னர் எம்.கே.பி. நகர் போலீசார் அரசு ஊழியரான வேலாயுதத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story