குடிநீர், பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - மணிகண்டன் எம்.எல்.ஏ. கோரிக்கை


குடிநீர், பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - மணிகண்டன் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 24 Sept 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.யுமான மணிகண்டன், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் எம்.எல்.ஏ.யும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளின் பாசனத்திற்கான தண்ணீர் பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு ஏற்பட்டது.

இந்த ஆண்டும் மழை பொய்த்து போனதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய பணிகளும் நடைபெறவில்லை. இதற்கிடையே வைகை அணையில் ஓரளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். தற்போது ஆங்காங்கே லேசாக பருவமழை பெய்துள்ளதால் வைகை ஆற்று படுகை ஈரத்தன்மையுடன் உள்ளது. தண்ணீர் திறந்து விடப்பட்டால் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே மராமத்து செய்யப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் வைகை தண்ணீரை தேக்கி வைத்து குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அவர்களும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story