கூடலூர் அருகே, சாலையோர பள்ளத்தில் விழுந்த வாகனங்களால் வீடு சேதம்
கூடலூர் அருகே சாலையோர பள்ளத்தில் விழுந்த வாகனங்களால் வீடு சேதம் அடைந்தது.
கூடலூர்,
கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் தேவாலா, பந்தலூர், சேரம்பாடி உள்பட முக்கிய பஜார்கள் உள்ளன. இந்த வழியாக ஏராளமான லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கோழிக்கோட்டில் இருந்து கூடலூர் மற்றும் ஊட்டிக்கு தினமும் ஏராளமான மீன்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. அதிகாலை நேரத்தில் அதிகளவு லாரிகள் கூடலூருக்கு வருகின்றன.
இந்த நிலையில் வழக்கம்போல் மீன்கள் ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று பந்தலூர் வழியாக கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. மினி லாரியை டிரைவர் இஸ்மாயில் என்பவர் ஓட்டினார். அப்போது கூடலூரில் இருந்து பந்தலூருக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை சுந்தர் என்பவர் ஓட்டி சென்றார். தேவாலா நீர்மட்டம் பகுதியில் வந்தபோது மினி லாரியும், காரும் நேருக்கு நேர் மோதும் அபாயம் ஏற்பட்டது.
உடனே மினி லாரி மற்றும் காரின் டிரைவர்கள் பிரேக் பிடித்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவை மோதி கொள்ளவில்லை. ஆனால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் மினி லாரி மற்றும் கார் தலைகுப்புற விழுந்தது. இதில் லேசான காயங்களுடன் டிரைவர்கள் உயிர் தப்பினர். மேலும் வாகனங்கள் விழுந்ததில் பள்ளத்தில் உள்ள ராஜேஷ் என்பவரின் வீடு சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீட்டை வழங்கி விடுவதாக வாகன டிரைவர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் எந்த புகாரும் இன்றி சமாதானமாக செல்வதாக கூறினர். இதை ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story